அம்பேத்கர்
Just another WordPress.com weblog

Dec
07

புனா ஒப்பந்தம் பற்றிய சுயமரியாதை இயக்கத்தின் பார்வை

தாழ்த்தப்பட்டோர் இயக்க வரலாற்றில் பேரளவில் இடையீடு செய்த ஒரு நிகழ்வு புனா ஒப்பந்தம் ஆகும். 24.9.32 அன்று தாழ்த்தப் பட்ட மக்களின் முக்கியத் தலைவரான அம்பேத்கருக்கும் காந்தி தலைமையிலான காங்கிரஸ், இந்துமகா சபை அணியினருக்கும் இடையே இவ்வொப்பந்தம் ஏற்பட்டது. தாழத்தப்பட்ட மக்களின் மிக முக்கியக் கோரிக்கையான இரட்டை வாக்குரிமையுடன் கூடிய தனித்தொகுதிக் கோரிக்கையை இவ்வொப்பந்தம் நிராகரித்தது. எனினும் பொதுத் தொகுதியில் அவர்களுக்குக் கூடுதல் ஸ்தானங்கள் வழங்க ஒப்புக்கொண்டது. இவ்வொப் பந்தத்திற்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளும் அவை குறித்த சுயமரியாதை இயக்கத்தின் பார்வையும் பல முக்கியமான செய்திகளை நமக்கு உணர்த்தவல்லவை. அவற்றை இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்.

பூனா ஓப்பந்தம் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே ஏற்பட்டது எனினும் காந்தி இதில் கையொப்பம் இடவில்லை. அவர் சிறையில் இருந்த காரணத்தால் அவருக்குப் பதில் அவரது மகன் தேவதாஸ் காந்திதான் இதில் கையொப்பம் இட்டுள்ளார். மேலும், ஒப்பந்தம் கையெழுத்தான போது பெரியார் ஐரோப்பியச் சுற்றுப்பயணத் தில் இருந்தார் என்பதும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டியவை ஆகும்.

இந்தியாவுக்கான எதிர்கால அரசியலமைப்பை இறுதி செய்யும் நோக்குடன் 1927இல் உருவாக்கப் பட்ட சைமன் கமிஷன் அறிக்கை தாழ்த்தப் பட்டோருக்கான பிரதிநிதித்துவம் பற்றி இவ்வாறு கூறுகிறது:

“”. . . தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்குத் தனி வழிவகை இல்லாவிட்டால் பொதுத் தொகுதிகளில் அவ்வாறு தேர்ந்தெடுத்துக்கொள்ள வாய்ப்பே இருக்காது. நீண்டகாலப் பார்வையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம் என்பது அவர்கள் அரசியல் செல்வாக்குச் செலுத்துவதன் மூலமே அடையக்கூடியதாய் உள்ளவரை, ஏனைய சக்திகள் அவர்களின் ஆதரவை நாடுவதற்கும், அவர்களின் தேவைகளைக் கருதுவதற்கும் போதிய அளவுக்கு முக்கியத் துவம் வாய்ந்த நிலையை அவர்கள் அடை வதே பொருத்தமாய் இருக்கும்”. (காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்குச் செய்த தென்ன (1945) – அம்பேத்கர் – தலித் சாகித்திய அகாடமி, சென்னை, 1998, ப. 397)

சைமன் கமிஷன் அறிக்கையை விவாதிக்க 12.11.1930முதல் 19.1.1931வரை முதல் வட்டமேஜை மகாநாடு கூடியது. தாழ்த்தப்பட்டோர் சார்பாக டாக்டர் அம்பேத்கர், சுயமரியாதை இயக்கத் தோடும் பெரியாரோடும் நெருங்கிய தொடர்புடையவரான ராவ்பகதூர் ஆர். சீனிவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். அம்பேத்கர், சீனிவாசன் ஆகியோர் தாழ்த்தப்பட்ட மக்களுக் கான தனித்தொகுதியை அரசியலமைப்பில் சேர்க்க வலியுறுத்தினர். ஆனால் இந்தியாவின் பெரிய அரசியல் இயக்கமான காங்கிரஸ் அம்மகா நாட்டைப் புறக்கணித்ததால் முழுமையான முடிவு எதையும் அம்மகாநாடு எடுக்கவில்லை. இதனிடையே இந்தியாவில் காங்கிரசுக்கும் ஆங்கில அரசுக்கும் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அதன் விளைவாக காங்கிரஸ் தனது சட்டமறுப்பு – உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நிறுத்திவிட்டு மகாநாட்டில் பங்குபெறச் சம்மதித்தது. 12.9.1931இல் தொடங்கிய இரண்டாவது வட்டமேஜை மகாநாட்டில் காந்தி காங்கிரசின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.

17.9.1931இல் வட்டமேஜை மகாநாட்டில் காந்தி பேசும்போது, “”முஸ்லிம் – சீக்கியப் பிரிவுகளுக்குச் சிறப்புச் சலுகை அளித்து ஒத்துப்போகக் காங்கிரஸ் சம்மதித்துள்ளது. அதற்கு ஆணித்தரமான, சரித்திர ரீதியான காரணங்கள் உள்ளன. ஆனால் அக்கொள்கையை எந்த வடிவத்திலோ அல்லது முறையிலோ காங்கிரஸ் நீட்டிக்காது” என்று சொன்னதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் தனித்தொகுதிக் கோரிக்கையை நிராகரித்தார். (“புனா ஒப்பந்தம்’ – அம்பேத்கர், தமிழாக்கம் அ. ஜெய்சன் 1998, ப. 37)

தாழ்த்தப்பட்டோர் கோரிய தனிப்பிரதிநிதித்துவத்தைத் திராவிட இயக்கம் தொடக்கம் முதலே ஆதரித்து வந்துள்ளது என்பதைக் குடி அரசு ஆவணங்கள் காட்டுகின்றன. காந்தி தொடர்பான அம்பேத்கரின் கருத்தைப் பெரியார் அரண் செய்தார். “வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?’ என்ற தலையங்கத்தில் இவ்வாறு கூறுகிறார் (குடி அரசு, 8.11.31, பக். 10):

“”சீமையில் (லண்டனில்) அம்பேத்கர் அவர்கள் நல்ல வெளிப்படையான பாஷையில், “காங்கிரசுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை, காங்கிரசில் தாழ்த்தப்பட்ட மக்கள் கிடையாது’ என்றார். அப்படியிருக்க திரு. காந்தியார் திரும்பத் திரும்ப காங்கிரசும் தானும்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதிகளென்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்படிச் சொல்கிறவர்களுக்குச் சிறிதாவது மானமோ, சுயமரியாதையோ இருக்குமானால் அம்பேத்கருக்குப் பதில் சொல்லிவிட்டு மேற்கொண்டு சமாதானம் சொல்ல வேண்டும். . . .”

தனித்தொகுதி தொடர்பான கருத்து வேறுபாட்டின் பின்னர் ஆங்கில அரசிடமும் காந்தி சிறிது கால அவகாசம் கேட்டார். அக்கால இடைவெளியில் காந்தி முஸ்லிம்களுடன் ரகசியப் பேச்சினை நடத்தினார். அப்பேச்சு “காந்தி முஸ்லிம் ஒப்பந்த வரைவாக’ முஸ்லிம் பேராளர்கள் குழுவினரின் கருத்தறிவதற்காக 6.10.31 அன்று முன்வைக்கப்பட்டது. இவ்வொப்பந்த வரைவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கக்கூடாது என்பது நேரடி வார்த்தைகளில் இல்லை. ஆனால் இந்த வரைவில் காந்தியின் முன் மொழிவுகளில் ஒன்றான, “”சீக்கியர்கள், சிறுபான்மையினர் தவிர வேறு எந்த வகுப்பினருக்கும் தனி ஒதுக்கீடுகள் கூடாது” என்ற அம்சமானது தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியை அரவமின்றிக் காலி செய்துவிடுகின்றது.

காந்தியின் இந்த ரகசிய முயற்சி பற்றி அம்பேத்கரும் சீனிவாசனும் “டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகையில் கட்டுரை எழுதினர். அக்கட்டுரையைக் குடி அரசு (8.11.31, பக். 16) மறுவெளியீடு செய்து காந்தியை அம்பலப் படுத்தியது. பம்பாயில் அம்பேத்கர் பேசிய பேச்சின் விவரங்களைச் “சண்டமாருதம்’ வெளியிட்டிருந்தது. அதனை 7.2.32 நாளிட்ட குடி அரசு “லண்டனில் திரு. காந்தி தந்திரமா? சூழ்ச்சியா? டாக்டர் அம்பேத்கர் விளக்கம் என்ற தலைப்பில் மறுவெளியீடு செய்தது.

தனித்தொகுதிக்கு எதிராக காந்தி முன்வைத்த வாதங் களின் அபத்தத்தையும் சுயமுரண்பாட்டையும் சுய மரியாதை இயக்கம் அவ்வப்போது தோலுரித்துவந்தது. “திரு. காந்தி தனித்தொகுதியை மறுப்பதன் ரகசியம்’ என்ற கட்டுரையிலிருந்து: (குடிஅரசு, 22.11.31, பக்.  8 )

“”. . . திரு. காந்தி சரித்திர சம்பந்தமான காரணங்களால் முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் தனிப்பிரதிநிதித் துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்று கூறினார். இவ்வார்த்தையால் காந்தியின் மனப்பான்மை நன்றாக விளங்குகின்றது. முஸ்லிம்களும் சீக்கியர்களும் பரம் பரைப் பெருமையோடு ஆட்சி புரிந்தார்கள். ஆகை யால் அரசாங்க உரிமைகளுக்குப் பாத்திரமுடையவர் கள். . . என்ற கருத்தும் தீண்டாதார்களோ பரம்பரை யாகச் சுதந்திரமின்றி அடிமையாக வாழ்ந்தார்கள்; ஆகையால் அவர்களுக்குத் தனித்தொகுதிப் பாதுகாப்பு அவசியமில்லை என்ற கருத்தும் அடங்கி இருக்க வில்லையா?” என்கிறது.

இதே கருத்து அம்பேத்கரின் எழுத்துகளில் காணக் கிடைப்பது வியப்பான ஒன்றாகும்,

“”முஸ்லிம்களையும் சீக்கியர்களையும் அங்கீகரிக்கும்படி தம்மைக் கட்டாயப்படுத்தும் வரலாற்றுக் காரணங்கள் இருப்பதாக அவர் (காந்தி) வாதிடுகிறார். அந்தக் காரணங்கள் என்ன என்பதை அவர் விளக்கியதே இல்லை. முஸ்லிம்களும் சீக்கியர்களும் பழைய ஆளும் வர்க்கங்களின் மிச்ச சொச்சங்களாகக் கருதுகின்ற காரணங்களைத் தவிர அவை வேறு எதுவாகவும் இருக்கமுடியாது”. (காங்கிரசும் காந்தியும். . . பக். 307)

காந்தி தனித்தொகுதியை எதிர்ப்பதற்கான காரணங் களாக அவரின் வர்ணாசிரம இந்து மதப்பற்று, சாதி இந்துக்கள் மீதான பற்று, தாழ்த்தப்பட்ட மக்களின் ஏதிலி நிலைமீது அவர் கொண்ட நம்பிக்கை ஆகியவை களே என அம்பேத்கர் கணித்தார். திரு. காந்தி தனித் தொகுதியை மறுப்பதன் ரகசியமென்ற 22.11.31 நாளிட்ட குடிஅரசு (ப.  8 ) கட்டுரை இவ்வாறு கூறுகிறது:

“”முஸ்லிம் – கிறிஸ்தவர் தீண்டாதார் எல்லோருக்கும் தனிப்பிரதிநிதித்துவம் கொடுத்துவிட்டால் சட்டசபை களில் அவர்களின் சரியான பிரதிநிதிகள் கண்டிப்பாக வந்துசேர்ந்து விடுவார்கள். மேற்கண்ட வகுப்பினர் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்தால் இந்துக்களின் பிரதிநிதிகளுக்குச் சற்றேறக்குறைய சமமாக ஆகிவிடு வார்கள். முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஐரோப் பியர்களும் தீண்டாதவர்களும் சமதர்ம விரோதிகள் அல்ல. ஆகையால் சமூக சமத்துவத் தீர்மானங்களும் சமதர்மத் தீர்மானங்களும் நிறைவேற்றப்படலாம். ஆகவே, வர்ணாசிரம வைதீக இந்துமதம் அழிய வேண்டிய நிலை வந்துவிடும் அக்கருத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் திரு. காந்தி தனிப்பிரதி நிதித்துவத்தைத் தர மறுக்கிறார்”.

தனித்தொகுதியை எதிர்க்கும் காந்தியாரின் வாதங் களே அவருக்கு எதிராகத் திரும்புவதை “குடி அரசு’ எடுத்துக்காட்டியது. “திரு. காந்தியின் முன்னுக்குப் பின் முரண்’ என்ற ஆர். ரெத்தின சபாபதி எழுதிய கட்டுரை (குடிஅரசு 15.5.32, ப. 15), வட்டமேஜை மாநாட்டில் தானே தாழ்த்தப்பட்டோருக்கு ஏகப் பிரதிநிதியென காந்தி கூறியதைச் சுட்டிக்காட்டி, இவ்வகையில் அவரைப் பாசிசவாதியான முசோலினியுடன் ஒப்பிடுகிறது.

தனித்தொகுதியை ஒழிக்க காந்தி முஸ்லிம்களோடு நடத்திய ரகசியப் பேச்சு முயற்சியை முஸ்லிம்கள் நிராகரித்தனர். காந்தியிடம் சிறுபான்மையினர் பெற்ற அனுபவம், ஒடுக்கப்பட்ட மக்களிடம் அவர்கள் நெருங்கிவரச் செய்தது. இதன் விளைவாகத் தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஐரோப்பியர்கள் ஆகிய சிறுபான்மை இனத்தவர்களிடம் இணக்கம் வளர்ந்தது. அது அவர்களிடையே “சிறுபான்மையோர் ஒப்பந்தம்’ ஏற்படுவதிலேயே முடிந்தது. அம்பேத்கர், ஆகாகான், பன்னீர்செல்வம், கிட்னிகர், சர்குபார்ட்ஹர் முதலா னோர் இதில் கையொப்பம் இட்டனர். இவர்களுள் இந்திய கிறிஸ்தவர்கள் சார்பாகக் கையொப்பம் இட்ட பன்னீர்செல்வம் சுயமரியாதை இயக்கத்தோடு நெருங்கிய தொடர்புடையவர், நீதிக்கட்சி உறுப்பினர். 19.6.32 நாளிட்ட குடி அரசு இதழின் தலையங்கம் சிறுபான்மையோர் ஒப்பந்தம் குறித்து வரவேற்றிருந்தது.

தாழ்த்தப்பட்டோரைத் தொடர்ந்து பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட மக்களும், “இந்து மதத்தை’ விட்டு வெளியேறக் கோரும் (20.11.32) குடி அரசுத் தலையங்கமும் குறிப்பிடத்தக்கது. தனிதொகுதி தொடர்பாகக் குடி அரசில் எழுதப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து எழுத்துகளிலும் தாழ்த்தப்பட்டோரில் முஸ்லிம்கள் அரசியல் இணைப்பையும் இந்துமதக் கற்பிதத்தை உடைப்பதையும் பற்றியுமே பெருமளவு காண முடிகின்றது.

தனித்தொகுதி தொடர்பாக இரண்டாவது மகாநாட்டி லும் எம்முடிவும் ஏற்படவில்லை. அனைத்துத் தரப் பினரும் இணைந்து ஒரு முடிவெடுத்தால் அதனை ஏற்றுக்கொள்வது என்ற தெளிவான நிபந்தனையுடன் வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்புக் கூறும் பொறுப்பு பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆங்கில அரசு தனித் தொகுதிக்கு ஆதரவான மனநிலையிலேயே உள்ளது என்பதைக் கண்ட காந்தி ஜனவரி (1932) முதல் வாரத்தில் நாடு திரும்பினார். உடனே சத்தியாக்கிரகப் போரைத் தொடர்வதாக அறிவித்தார். எனவே ஆங்கில அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முறித்ததாகக் காந்தியை கைதுசெய்து புனா ஏரவாட சிறையில் அடைத்தது அரசு. சிறையிலிருந்தும் சற்றும் மனம் தளராது தனித் தொகுதிக்கு எதிராகத் தன் கருத்துகளை வெளிப்படுத்தினார். தனித்தொகுதியை ஏற்கக்கூடாது என்றும், ஏற்றால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் துறப்பேன் என்றும் (11.3.1932) அரசுக்குக் கடிதம் எழுதினார்.

16.8.32 அன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனித் தேர்தல் தொகுதியை அளிக்கும் வகுப்புத் தீர்ப்பு வெளியிடப்பட்டது. 28.8.1932 குடி அரசுத் தலையங்கம், “குற்றம் சொல்ல வாய் உண்டா?’ என்ற தலைப்பில் இதனை வரவேற்றது. வகுப்புத் தீர்ப்பு வெளியான உடன், 18.8.32 அன்று, வகுப்புத் தீர்ப்பை மாற்றாவிட்டால் தான் 20.9.32 முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கபோவதாக காந்தி அறிவித்தார்.

இதனை அடுத்து சுயமரியதை இயக்கத்தின் தீவிரமான எதிர்வினைகள் எழுந்தன. 18.9.32 நாளிட்ட குடிஅரசு (ப. 7) இதழில் “காந்தியாரின் தற்கொலை’ என்ற தலைப் பில் குத்தூசி குருசாமி எழுதிய கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் காந்தியின் உண்ணாவிரதச் சத்தியாக் கிரகம் பற்றிக் கூறும் அவர், “”கடைக்கெதிரே உட்கார்ந்துகொண்டு கத்தியால் தலையிலும் கையிலும் அடித்துக்கொண்டு காசு கொடுத்தால் ஒழிய போகமாட்டேன் என்று வியாபாரத்தைக் கெடுத்து “”சத்தியாக்கிரகம்” செய்யும் சோம்பேறிக் கல்லுளிமங்கனுக்கும் தோழர் காந்தியாருக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்கும் குருசாமி, தற்கொலை செய்வது சட்டப்படி குற்றமென்பதால் காந்தியார்மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பரிந்துரை செய்கிறார். “”ஆதிதிராவிடத் தோழர்களே கல்லுளிமங்கனுக்குப் பயந்து காசு போட்டுவிடாதீர்கள் என்று முடிக்கிறார்.

அதே குடி அரசு இதழ் “காந்தியின் மரண வாக்குமுலம்’ என்ற திராவிடன் கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில், “உண்ணாவிரத அறிவிப்பின் மூலம் காந்தியார் சழுக்கர் குழாத்தில் தலைசிறந்தவராகிவிட்டார்’ என்றும் காந்தியின் ஒரு உயிரைவிட ஏழு கோடி தாழ்த்தப்பட்ட வர்களின் உயிர் பெரிது என்றும் “

நன்றி : காலச்சுவடு

Feb
27

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு, காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிதாக எழுதப்பட வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு 20.1.2007 அன்று சட்டப்பேரவையில், ஆளுநர் உரை மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் இதை ஆதரித்துள்ளன. சமூக நீதிக் கண்ணோட்டத்தில் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றாலும், அதை மாற்ற அமைக்கப்படும் குழுவில் கண்டிப்பாக இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ள ஆளும் வகுப்பினர்தான் (பார்ப்பனர்கள்) அங்கம் வகிப்பர். மேலும், இன்று சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை – நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறையிலும் நடைமுறைப்படுத்துவதற்கும், தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கும் – தடையாக இருப்பது யார்? இதற்கு தடையாக இருந்து கொண்டு, சட்டத்தைக் குறை கூறுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? இந்துத்துவ சிந்தனை எல்லா கட்சிகளிலும், அமைப்புகளிலும், பொது சிந்தனையிலும் நீக்கமற நிறைந்துள்ள நிலையில், ஒரு மதச்சார்பற்ற சட்டத்தை வடித்தெடுக்கும் சூழல் இன்றைக்கு இருக்கிறதா? இந்து சங்பரிவாரங்கள் ராமராச்சியத்தின் அடிப்படையில் உருவாக்கியுள்ள மாதிரி அரசமைப்புச் சட்டத்தை, எவ்வழியிலாவது திணிக்க தீவிரமாக முயல்வதை மறந்துவிடக் கூடாது. இந்நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தலைமைச் சிற்பியான டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை இன்றைய தலைவர்களும், இயக்கங்களும் சரியாகப் புரிந்து கொள்ளும் வகையில் – அவர் 25.11.1949 அன்று மக்களவையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை மட்டும் காலத்தின் தேவைக்கேற்ப வெளியிடுகிறோம்.

Ambedkar அரசியல் நிர்ணய சபையின் பணிகளை ஒரு முறை திரும்பிப் பார்க்கும்போது, 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று, முதலில் கூடியதிலிருந்து இரண்டு ஆண்டுகள் பதினோரு மாதங்கள், பதினேழு நாட்கள் கழிந்துள்ளன. இந்தக் கால அளவில் அரசியல் நிர்ணய சபை மொத்தத்தில் பதினோரு முறை கூடியுள்ளது. இந்தப் பதினோரு அமர்வுகளில், நோக்கங்களைப் பற்றிய தீர்மானங்களை நிறைவேற்றவும், அடிப்படை உரிமைகள் பற்றிய குழுவின் அறிக்கை, ஒன்றியத்தின் அரசியல் சட்டம் பற்றிய அறிக்கை, ஒன்றியத்தின் அதிகாரம் பற்றிய அறிக்கை, மாகாண அரசியல் அமைப்புச் சட்டம் பற்றிய அறிக்கை, சிறுபான்மையினர் பற்றிய அறிக்கை, பட்டியல் வகுப்பினர் பற்றிய அறிக்கை, பட்டியல் பழங்குடியினர் பற்றிய அறிக்கை ஆகியவைகளைப் பரிசீலிப்பதில் கழிந்தன. ஏழு, எட்டு, ஒன்பது, பத்து மற்றும் பதினோராவது அமர்வுகள், அரசியல் சாசன வரைவுச் சட்டத்தை பரிசீலிப்பதில் கழிந்தன. அரசியல் நிர்ணய சபையின் இந்தப் பதினோரு அமர்வுகளுக்கும் 165 நாட்கள் பிடித்தன.

வரைவுக் குழுவைப் பொறுத்தவரை, அது அரசியல் நிர்ணய சபையால் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆகஸ்டு மாதம் 30 ஆம் நாளில் அது தன் முதல் கூட்டத்தை நடத்தியது. ஆகஸ்டு 30 ஆம் நாளிலிருந்து 141 நாள்கள் அது அமர்வில் இருந்தது. இந்த சமயத்தில் அது அரசியல் சாசன வரைவைத் தயாரித்தது. வரைவுக் குழுவின் பணிக்கு அடிப்படையாக, அரசியல் சாசனத் தயாரிப்பு ஆலோசகர் தயாரித்து, வரைவுக் குழுவின் பணிக்கு அடிப்படையாகக் கொடுக்கப்பட்ட அரசியல் சாசனம் – 243 விதிகளையும் 13 அட்டவணைகளையும் கொண்டிருந்தது. வரைவுக் குழு அரசியல் நிர்ணய சபைக்கு அளித்த முதலாவது அரசியல் சாசன வரைவில், 315 விதிகளும் 8 அட்டவணைகளும் இருந்தன. பரிசீலனைக் கூட்டத்திற்குப் பிறகு அரசியல் சாசன வரைவில் அடங்கியிருந்த விதிகளின் எண்ணிக்கை 386 ஆக அதிகரித்தது. அதன் இறுதி வடிவத்தில் அரசியல் சாசன வரைவு, 395 விதிகளையும் 8 அட்டவணைகளையும் கொண்டுள்ளது. சுமார் 7,635 திருத்தங்கள் அரசியல் சாசன வரைவுக்கு முன் வைக்கப்பட்டன. இவற்றில் எதார்த்தத்தில் சபையில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் 2,475 ஆகும்.

இந்தத் தகவல்களையெல்லாம் நான் ஏன் கூறுகிறேன் என்றால் ஒரு கட்டத்தில், இந்தப் பணியை முடிப்பதற்கு அரசியல் நிர்ணய சபை அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது என்று கூறப்பட்டது. அது, பொதுமக்கள் பணத்தை விரயம் செய்து ஆமை வேகத்தில் பணியாற்றுவதாகக் குறை கூறப்பட்டது. ‘ரோமாபுரி எரியும்போது நீரோ மன்னன் பிடில் இசைத்ததைப் போன்றுள்ளது’ என்று பழி சுமத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளில் ஏதாவது நியாயம் உள்ளதா?

அரசியல் சாசனங்களை உருவாக்க மற்ற நாடுகளிலுள்ள அரசியல் நிர்ணய சபைகள் எடுத்துக் கொண்ட நேரத்தை நாம் பார்க்கலாம். சில எடுத்துக்காட்டுகள் : 1787 மே மாதம் 25 அன்று கூடிய அமெரிக்க கன்வென்ஷன், தன் பணியை 1787 செப்டம்பர் 17இல் அதாவது நான்கு மாதத்தில் முடித்தது. கனடா நாட்டு அரசியல் சாசன அமைப்பு கன்வென்ஷன், 1864 அக்டோபர் 10 இல் கூடியது; 1867 மார்ச்சில் அரசியல் சாசனம் ஏற்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளும் அய்ந்து மாதங்களும் எடுத்துக் கொண்டது. ஆஸ்திரேலியாவின் அரசியல் சாசனத் தயாரிப்பு அவை, 1891 மார்ச்சில் கூடியது; 1900 சூலை 9 இல் அரசியல் சாசனத்தை உருவாக்கியது. 9 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. தென் ஆப்பிரிக்க கன்வென்ஷன், 1908 அக்டோபரில் கூடியது; 1909 செப்டம்பர் 20 இல் அரசியல் சாசனத்தை நிறைவேற்றியது. இதற்கு ஓராண்டுக்கால உழைப்பு தேவைப்பட்டது.

அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க அரசியல் சாசனத் தயாரிப்பு அமைப்புகளைவிட, நாம் அதிக காலம் எடுத்துக் கொண்டது உண்மைதான். ஆனால், கனடா கன்வென்ஷனைவிட அதிக காலம் எடுத்துக் கொள்ளவில்லை; ஆஸ்திரேலியா கன்வென்ஷனை விடக் குறைவாகவே நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் கால அளவை ஒப்பிடும் போது, இரண்டு விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசியல் சாசனங்கள், இந்திய அரசியல் சாசனத்தைவிட மிகச் சிறியவை. நான் ஏற்கனவே கூறியபடி, நமது அரசியல் சாசனத்தில் 395 விதிகள் உள்ளன. அமெரிக்க அரசியல் சாசனத்தில் 7 விதிகள் மட்டுமே உள்ளன. முதல் நான்கு விதிகள் 21 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கனடா நாட்டு அரசியல் சாசனத்தில் 147ம், ஆஸ்திரேலிய சாசனத்தில் 1283ம் தென் ஆப்பிரிக்க அரசியல் சாசனத்தில் 153 பிரிவுகளும் உள்ளன.

இரண்டாவது விஷயம் என்னவென்றால் – அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியல் அமைப்புச் சாசனங்களை உருவாக்கியவர்கள், திருத்தங்கள் சம்பந்தமான பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கவில்லை. முன்மொழியப்பட்ட வடிவத்திலேயே அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், அதே நேரத்தில் நமது அரசியல் நிர்ணய சபை 2,473 திருத்தங்கள் வரை சந்திக்க வேண்டியிருந்தது. இந்த உண்மை களை எல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால், நாம் தாமதமாகச் செயல்பட்டோம் என்ற குற்றச்சாட்டு, முற்றிலும் ஆதாரமற்றது என்று எனக்குத் தோன்றுகிறது. இவ்வளவு கடினமான பணியை, இவ்வளவு விரைவில் நிறைவேற்றியதற்காக, அரசியல் நிர்ணய சபை கண்டிப்பாகத் தன்னைப் பாராட்டிக் கொள்ளலாம்…

ஒரே ஒரு தனிப்பட்ட உறுப்பினரைத் தவிர, வரைவுக் குழுவின் பணிகளைக் குறித்து, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் பாராட்டுதல்களில் பொதுவான உடன்பாடு காணப்படுகிறது. தனது பணிகளை அங்கீகரித்து, தன்னிச்சையாக தாராளமாக வழங்கப்பட்ட பாராட்டுதல்களினால், குழு மகிழ்ச்சி அடைந்திருக்கும் என்பதில் அய்யமில்லை. இந்த வரைவுக் குழு சபையின் உறுப்பினர்களும் வரைவுக் குழுவில் என்னுடன் பணியாற்றிய நண்பர்களும் என் மீது பொழிந்த புகழாரங்களுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்ள சொற்கள் கிடைக்காமல் திண்டாடுகிறேன். பட்டியல் சாதியினரின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமென்பதைத் தவிர, வேறு எந்தவித நோக்கங்களுமின்றிதான் நான் அரசியல் நிர்ணய சபையில் சேர்ந்தேன். அதிகப் பொறுப்பான பணி களை ஏற்க நான் அழைக்கப்படுவேன் என்று நான் சிறிதளவுகூட சிந்திக்கவில்லை. என்னை வரைவுக் குழுவுக்கு சட்டமன்றம் தேர்ந்தெடுத்தபோது, நான் பெரிதும் வியப்படைந்தேன். வரைவுக் குழு என்னை அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்தபோது, நான் அதைவிட கூடுதல் வியப்படைந்தேன். எனது நண்பர் அல்லாடி கிருஷ்ணசாமி (அய்யர்) போன்ற என்னைவிட மிகவும் தகுதிபெற்ற சிறந்த பெரிய மனிதர்கள் வரைவுக் குழுவில் இருந்தனர். என் மீது இவ்வளவு நம்பிக்கை கொண்டு, பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து – அவர்களுடைய கருவியாக என்னைப் பயன்படுத்தி – நாட்டிற்குத் தொண்டு செய்ய எனக்கு அளித்துள்ள வாய்ப்புக்கு அரசியல் நிர்ணய சபைக்கும், வரைவுக் குழுவிற்கும் நன்றியுடையவனாக இருப்பேன்…

எல்லா உறுப்பினர்களும் கட்சிக் கட்டுப் பாட்டிற்கு அடங்கி நடந்திருந்தால், அரசியல் நிர்ணய சபையின் நடவடிக்கைகள் சுவையற்றதாக இருந்திருக்கும். கட்சிக் கட்டுப்பாடு, அதன் கண்டிப்பான தன்மையால் சட்டமன்றத்தை ‘ஆமாம் சாமி’களின் கூட்டமாக மாற்றியிருக்கும். நல்லவேளை சில ‘புரட்சியாளர்கள்’ இருந்தனர். திரு. காமத், டாக்டர் பி.எஸ். தேஷ்முக், திரு. சித்வா, பேராசிரியர் சக்சேனா, பண்டிட் தாகூர்தாஸ் பார்கவா ஆகியவர்களைக் குறிப்பிட வேண்டும். அவர்கள் எழுப்பிய பிரச்சினைகளெல்லாம் பெரும்பாலும் சித்தாந்தம் பற்றியவையே. அவர்களுடைய ஆலோசனைகளை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதிருந்தது, அவர்களுடைய ஆலோசனைகளின் மதிப்பைக் குறைத்துவிடவில்லை. சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு உயிரோட்டம் அளிக்க, அவர்கள் செய்த பணியை குறைத்து மதிப்பிட முடியாது. நான் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் இல்லையென்றால், அரசியல் சாசனத்தின் அடிப்படை யான கோட்பாடுகளை விளக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்காமல் போயிருக்கும். அரசியல் சாசனத்தை எந்திர கதியில் நிறைவேற்றுவதைவிட இது முக்கியமானது.

இறுதியாக, இந்தச் சபை நடவடிக்கைகளை நடத்திய முறைக்கு தலைவர் அவர்களே, உங்களுக்கு நான் என் நன்றியைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். இந்த சபையின் நடவடிக்கைகளில் பங்கு கொண்டவர்களுக்கு – தாங்கள் காட்டிய பரிவும், மரியாதையும் அவர்களால் மறந்துவிட முடியாது. வரைவுக் குழுவின் திருத்தங்கள் சில தருணங்களில் தொழில் ரீதியான சில காரணங்களினால் ரத்து செய்யப்பட வேண்டி வந்தது. அவை எனக்கு மிகவும் நெருக்கடியான தருணங்களாக இருந்தன. அரசியல் சாசனத் தயாரிப்புப் பணி; சட்டப் பிடிப்பில் சிக்கிக்கொள்ள அனுமதிக்காததற்கு நான் முக்கியமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நண்பர்கள் திரு. அல்லாடி கிருஷ்ணசாமி (அய்யரும்), திரு. டி.டி. கிருஷ்ணமாச்(சாரி)யும் அரசியல் சாசனத்திற்கு எவ்வளவு ஆதரவு அளிக்க முடியுமோ அவ்வளவு ஆதரவு அளித்துள்ளனர். எனவே, நமது அரசியல் சாசனத்தின் சிறப்புத் தகுதிகளைப் பற்றி இப்பொழுது நான் பேசப் போவதில்லை. ஏனெனில், ஓர் அரசியல் சாசனம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அதைச் செயல்படுத்து பவர்களின் தன்மையைப் பொறுத்து, அது மோசமானதாக மாறலாம். ஓர் அரசியல் சாசனம் எவ்வளவு மோசமாக இருப்பினும், அதைச் செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருப்பின் – அது ஒரு சிறந்த அரசியல் சாசனமாக செயல்படும். ஓர் அரசியல் சாசனத்தின் செயல்பாடு அதன் தன்மையை மட்டும் முற்றிலும் சார்ந்ததன்று. அரசின் உறுப்புகளான சட்டமன்றம், ஆட்சித்துறை, நீதித்துறை ஆகியவைகளை உருவாக்க மட்டும் அரசியல் சாசனம் வழிவகை செய்யும். ஆனால், அரசின் இந்த அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு ஆதாரமான காரணிகள் – மக்களும், அவர்கள் தங்கள் நோக்கங் களையும் அரசியல் விருப்பங்களையும் நிறைவேற்ற கருவிகளாகப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுமேயாகும். இவற்றின் செயல்பாடுகளைப் பொறுத்தே அதன் வெற்றியுள்ளது.

இந்திய மக்களும் அவர்களுடைய அரசியல் கட்சிகளும் எம்முறையில் நடந்து கொள்வார்கள் என்பதை யார் கூற முடியும்? தங்கள் நோக்கங்களை அடைய, அவர்கள் அரசியல் சாசன ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பார்களா அல்லது புரட்சிகர முறைகளைப் பின்பற்றப் போகிறார்களா? அவர்கள் புரட்சிகர முறைகளை பின்பற்றப் போகிறார்கள் என்றால், அரசியல் சாசனம் எவ்வளவு சிறப்புள்ளதாக இருந்தாலும், அது தோற்றுவிடும் என்று கூற எந்த தீர்க்கதரிசியும் தேவையில்லை. எனவே, மக்களும் அவர்களது கட்சிகளும் என்ன பங்கு வகிக்கப் போகிறார்கள் என்பதைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், அரசியல் சாசனத்தைக் குறித்துத் தீர்ப்பளிப்பது பயனற்றது.

கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சோஷலிஸ்டு கட்சி ஆகிய இரண்டு தரப்பினரிடமிருந்தும் பெருமளவில் அரசியல் சாசனத்துக்கு எதிரான கண்டனக் குரலைக் கேட்க முடிகிறது. அரசியல் சாசனத்துக்கு எதிராக அவர்கள் ஏன் கண்டனக் குரல் எழுப்புகின்றனர்? அது உண்மையிலேயே ஒரு மோசமான அரசியல் சாசனமா? இல்லை என்று உறுதியாகக் கூறுகிறேன். பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், அரசியல் சாசனம் இருக்க வேண்டுமென்று கம்யூனிஸ்டுக் கட்சி விரும்புகிறது. நாடாளுமன்ற ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படையில், இந்த அரசியல் சாசனம் அமைந்திருப்பதால் அவர்கள் கண்டனம் செய்கின்றனர்.

சோஷலிஸ்டுகள் இரண்டு விஷயங்களை விரும்புகிறார்கள். அவர்கள் விரும்பும் முதல் விஷயம் இதுதான் : இழப்பீடு எதுவும் அளிக்காமல், எல்லா தனியார் சொத்துகளையும் தேசியமயமாக்க அரசியல் சாசனம் அவர்களுக்குச் சுதந்திரம் அளிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். இரண்டாவதாக, சோஷலிஸ்டுகள் விரும்புவது, அரசியல் சாசனம் குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமைகள் முழுமையானதாக, வரம்பற்றதாக இருக்க வேண்டுமென்கிறார்கள். அப்பொழுதுதான் அவர்கள் கட்சி ஆட்சிக்கு வரமுடியாவிட்டால், விமர்சிப்பதற்கு அவர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் இருப்பதுடன் அரசைக் கவிழ்ப்பதற்கும்கூட உரிமை இருக்கும்.

இந்த முக்கியமான அடிப்படைகளில்தான் அரசியல் சாசனம் குற்றம் சாட்டப்படுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகக் கோட்பாடு மட்டுமே அரசியல் ஜனநாயக முறையில் சிறந்தது என்று நான் கூறவில்லை. இழப்பீடு அளிக்காமல் தனியார் சொத்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற கோட் பாடு புனிதமானதென்றோ, அதிலிருந்து விலகிச் செல்வது கூடாது என்றோ நான் கூறவில்லை. அடிப்படை உரிமைகள் முழுமையாக இருக்கக் கூடாதென்றோ அல்லது அதற்கு அளிக்கப்பட்டுள்ள வரம்புகள் நீக்க முடியாததென்றோ நான் கூறவில்லை. நான் கூறுவதெல்லாம் இந்த அரசியல் சாசனத்தின் கோட்பாடுகள், தற்கால தலைமுறையினரின் கருத்துகளே. ஒருவேளை நான் மிகைப்படக் கூறுவதாகக் கருதினால், அவை அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் கருத்துகள் என்று கூறுகிறேன். அரசியல் சாசனத்தில் அவை சேர்க்கப்பட்டதற்கு, வரைவுக் குழுவின் மீது ஏன் குறை கூறுகின்றீர்கள்? அரசியல் நிர்ணய உறுப்பினர்கள்கூட ஏன் குறைகூறப்பட வேண்டும் என்று கேட்கிறேன்? அமெரிக்க அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்த அமெரிக்காவின் புகழ்பெற்ற அரசியல் நிபுணரான ஜெபர்சன், சில அழுத்தமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் சாசனத்தை உருவாக்குபவர்கள் எவரும் இதைத் தவிர்க்க முடியாது. ஓரிடத்தில் அவர் பின்வருமாறு கூறியுள்ளார்:

“ஒவ்வொரு தலைமுறையும் – பெரும்பான்மையின் விருப்பப்படி, தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு வாழும் உரிமையுடைய ஒரு தனிப்பட்ட தேசிய இனமாகக் கருத வேண்டும். மற்ற நாட்டுக் குடிமக்களுடன் தங்களைப் பிணைத்துக் கொள்ளும் உரிமையில்லாதது போலவே, அடுத்த தலைமுறை யையும் பிணைத்துக் கொள்ள முடியாது.” மற்றொரு இடத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்:

‘ஒரு தேசத்தின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள், தங்களுடைய நலனுக்காகக்கூடத் தொடக்கூடியதல்ல, மாற்றக்கூடியதல்ல என்ற கருத்து, பொதுமக்களுக்காக அவைகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்டவர்களுக்கு, தாராளமாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை – மன்னர் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க, ஒரு சட்ட வழிமுறையாக இருக்கலாம். ஆனால், இது அந்தத் தேசத்துக்கு எதிரான முட்டாள்தனமான கருத்தாகும். நமது சட்டவல்லுநர்களும் மதகுருமார்களும் பொதுவாக இந்தக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார்கள். ஒருவேளை முந்தைய சந்ததியினர், இந்த உலகை அதிக சுதந்திரத்துடன் கையாண்டிருக்கலாம். நம்மால் மாற்ற முடியாத சட்டங்களை நம்மீது திணிக்க உரிமை யுள்ளவர்களாக எண்ணியிருக்கலாம். அதே போன்று நாமும் சட்டங்களை உருவாக்க, எதிர்காலத் தலைமுறையினரின் மீது திணிக்கலாம். அவர்களுக்கு அதை மாற்றுவதற்கு எந்த உரிமையும் இருக்காது. மொத்தத்தில் உலகம் உயிருடன் வாழும் மனிதர்களுக்கல்ல, மடிந்தவர்களுக்கே அது சொந்தம்.”

ஜெபர்சன் கூறியது, முழுக்க முழுக்க உண்மை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஜெபர்சன் எடுத்துரைத்துள்ள இந்தக் கோட்பாட்டிலிருந்து அரசியல் நிர்ணய சபை விலகிச் சென்றிருந்தால் – அதைக் குறைகூறுவது, ஏன் கண்டனம் செய்வதுகூட நியாயமானதுதான். ஆனால், அது அப்படி நடந்து கொண்டுள்ளதா என்று கேட்கிறேன்? அவ்வாறு நடந்து கொள்ளாமல் முற்றிலும் மாறாக அது செயல்பட்டுள் ளது. அரசியல் சாசனத்தைத் திருத்துவது சம்பந்தமான வழிமுறைகளை ஆழ்ந்து நோக்க வேண்டும். இந்த அரசியல் சாசனம் தவறற்றது என்றோ, இறுதியானது என்றோ, இந்த சபை முத்திரை குத்தவில்லை. கனடா நாட்டிலுள்ளது போல, மக்களுக்கு அரசியல் சாசனத்தைத் திருத்தும் உரிமை வழங்கப்படாமலிருக்கவில்லை. ஆஸ்திரேலியா அல்லது அமெரிக்காவிலுள்ளது போல, அரசியல் சாசனத்தைத் திருத்த, சிறப்பு நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. மாறாக, அரசியல் சாசனத்தைத் திருத்துவதற்கு, மிகவும் எளிதான நடைமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.

நாடு இன்றுள்ள நிலையில் அரசியல் சாசனத்தைத் திருத்த, நாம் உருவாக்கியுள்ள எளிதான நடைமுறையை, உலகிலுள்ள வேறு எந்த அரசியல் நிர்ணய சபையாவது கொண்டு வந்துள்ளது என்று நிரூபிக்க முடியுமா? அரசியல் சாசனத்தை விமர்சிக்கும் எந்த நபருக்கும் நான் சவால் விடுகிறேன். அரசியல் சாசனத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைதான். அவர்களுக்கு ஆதரவாக வயது வந்தோர் வாக்குரிமை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறமுடியவில்லை என்றால், அரசியல் சாசனத்தைப் பற்றிய அவர்களது அதிருப்தி – பொதுமக்களால் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்றுதான் கூறவேண்டும்.

அரசியல் சட்ட முக்கியத்துவம் பெற்ற ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும்தான் குறிப்பிடுகிறேன். மத்திய அரசில் அதிகாரம் குவிக்கப்பட்டு, மாநிலங்கள் நகரசபைகள் அளவுக்கு அதிகாரம் இழந்துள்ளன என்ற கடுமையான குற்றச்சாட்டுள்ளது. இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு என்பது தெளிவாகத் தெரிவதுடன், அரசியல் சாசனம் எதை நடைமுறைப்படுத்த உள்ளது என்பதைப் பற்றிய தவறான அடிப்படையிலிருந்து இது எழுந்துள்ளது எனலாம். மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பொறுத்த வரையில், அது அமைந்துள்ள அடிப்படைக் கோட்பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியம். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சட்டமன்ற மற்றும் நிர்வாகப் பிரிவினை, மத்திய அரசு இயற்றும் சட்டத்தினால் அல்லாமல் அரசியல் சாசனத்தின் மூலமே நிர்ணயிக்கப்படுகிறது என்பதுதான் கூட்டாட்சி முறையின் அடிப்படையான கோட்பாடு. அதைத்தான் அரசியல் சாசனம் செயல்படுத்துகிறது. நமது அரசியல் சாசனத்தின்படி, மாநிலங்கள் தங்கள் சட்டமன்ற மற்றும் நிர்வாக அதிகாரத்திற்கு மத்திய அரசைச் சார்ந்து இருக்கவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் சம நிலையில் உள்ளன. இப்படிப்பட்ட ஓர் அரசியல் சாசனத்தை மத்திய அரசுக்கு சாதகமானது என்று கூறப்படுவதைப் புரிந்து கொள்வது கடினமாக உள்ளது.

வேறு எந்தக் கூட்டாட்சி அரசியல் சாசனத்தில் உள்ளதைக் காட்டிலும் அதிக அளவிலான களத்தை, அதனுடைய சட்டமன்ற மற்றும் நிர்வாக அதிகாரத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசுக்கு இந்த அரசியல் சாசனம் ஒதுக்கியிருக்கலாம். எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டிருக்கலாம். இந்த அம்சங்கள் கூட்டாட்சியின் சாரமாக அமைவதில்லை. மத்திய அரசுக்கும் அதன் மாநிலங்களுக்கும் இடையே, சட்டமன்ற மற்றும் நிர்வாக அதிகாரத்தை அரசியல் சாசனம் பகுத்தளிப்பதுதான் கூட்டாட்சி முறையின் முக்கிய அம்சம் எனலாம். இந்தக் கோட்பாட்டைத்தான் நமது அரசியல் சாசனம் கொண்டுள்ளது. அதைப் பற்றி எந்தவித அய்யப்பாடும் இருக்க முடியாது. எனவே, மாநிலங்கள் மத்திய அரசின் கீழ் வைக்கப்பட்டுள்ளன என்று கூறுவது தவறாகும். இந்த அதிகாரப் பிரிவின் எல்லையை, மத்திய அரசு தன் விருப்பப்படி மாற்ற முடியாது. நீதித் துறைகூட ஒன்றும் செய்ய முடியாது. இது மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

‘நீதிமன்றங்கள் திருத்தம் செய்யலாம். ஆனால், எதை ஒன்றையும் அதற்குப் பதிலாகப் புகுத்த முடியாது. முன்பு கூறிய விளக்கங்களுக்கு புதிய வாதங்களை, புதிய கருத்துகளை அளிக்கலாம். ஒரு சில சந்தர்ப்பங்களில் இந்த எல்லைக் கோட்டைத் தாண்டலாம். ஆனால், சில வரையறைகளை அவை தாண்ட முடியாது. குறிப்பிட்டு ஒதுக்கப்பட்டுள்ள சில அதிகாரங்களை அவை மாற்றி ஒதுக்க முடியாது. ஏற்கனவே உள்ள அதிகாரத்தின் கட்டுக் கோப்பை அவை விரிவுபடுத்த முடியும். வெளிப்படையாக ஓர் அமைப்புக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை, வேறு ஓர் அதிகார அமைப்புக்குக் கொடுக்க முடியாது.”

ஆகவே, கூட்டாட்சி முறைக்கு மாறாக மத்திய அரசில் அதிகாரக் குவிப்பு என்ற முதல் குற்றச்சாட்டு தோல்வி அடைந்து விடுகிறது.

மாநில அரசுகளைப் புறக்கணித்து செயல்பட, மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது இரண்டாவது குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். இந்த மாதிரி அதிகப்படியான அதிகாரங்களை அரசியல் சாசனம் அளிப்பதற்காக அதைக் கண்டனம் செய்வதற்கு முன் சில நோக்கங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அதிகப்படியான அதிகாரம் என்பது, அரசியல் சாசனத்தின் பொதுவான அம்சமாக இல்லை. அது பயன்படுவதும், செயல்படுத்தப்படுவதும், நெருக்கடி கால நிலைகளில் மட்டுமே. இரண்டாவதாக சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு நெருக்கடி நிலை தோன்றும்போது, மத்திய அரசுக்கு அதிகப்படியான அதிகாரம் கொடுப்பதைத் தவிர்க்க முடியுமா? ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் மத்திய அரசுக்கு இப்படிப்பட்ட அதிகப்படியான அதிகாரம் கொடுப்பதின் நியாயத்தை மறுப்பவர்கள், பிரச்சினையின் அடிப்படையில் உள்ள விஷயத்தைத் தெளிவாகக் காணவில்லை என்று தெரிகிறது. ‘வட்ட மேசை’ என்ற இதழின் 1935 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வெளியீட்டில், இந்தப் பிரச்சினை மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து பின்வரும் பகுதியைக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆசிரியர் கூறுகிறார்:

‘அரசியல் அமைப்பு முறைகள் என்பவை உரிமைகளும், கடமைகளும் அடங்கிய தொகுதியாக உள்ளன. இறுதியில் யாருக்கு அல்லது எந்த அதிகார அமைப்புக்கு ஒரு குடிமகன் தன் விசுவாசத்தைச் செலுத்துகிறான் என்பதில் இது அடங்கியிருக்கிறது. சாதாரண நடைமுறைகளில் இந்தக் கேள்வி எழுவதில்லை. ஏனெனில், சட்டம் அதை கவனித்துக் கொள்கிறது. இந்த மாதிரி பல்வேறு நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிட்ட செயல்பாடுகளில் – ஓர் அதிகார அமைப்பிற்கும், மற்ற நடவடிக்கைகளில் வேறு ஓர் அதிகார அமைப்பிற்கும் பணிந்து, குடிமகன் தன் அலுவல்களை கவனித்து வருகிறான். ஆனால், ஒரு நெருக்கடி உருவாகும்போது விசுவாசத்தைக் கோரும் உரிமை யாருக்கு என்பதில் முரண்பாடுகள் தோன்றுகின்றன. இறுதியான விசுவாசத்தைப் பிரிப்பது சாத்தியமில்லை என்பது அப்போது தெளிவாகிறது. இறுதியாக, சட்ட விளக்கத்தின் மூலம் விசுவாசப் பிரச்சினையை தீர்மானிக்க முடியாது. எல்லா எதார்த்த நிலைமைகளுக்கும் ஒத்து சட்டம் இருக்க வேண்டும். எல்லா சம்பிரதாய முறைகளையும் களைந்துவிட்டுப் பார்த்தால் கேள்வி இதுதான் – குடிமகனின் எஞ்சிய விசுவாசம், எந்த அதிகார அமைப்பிற்கு உள்ளது? அது மத்திய அரசுக்கா அல்லது உறுப்பினராக உள்ள மாநிலத்திற்கா?”

பிரச்சினையின் காரணமான இந்தக் கேள்வியின் பதிலைப் பொறுத்துதான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு உள்ளது. பெரும்பான்மையான மக்களின் கருத்துப்படி, நெருக்கடி காலத்தில் குடிமகனின் எஞ்சிய விசுவாசம் மத்திய அரசின் மீதுதான்; உறுப்பினராகவுள்ள மாநிலங்களின் மீதல்ல என்பதில் அய்யப்பாடு இல்லை. நாடு முழுவதற்குமான பொது நலனுக்காக, பொதுவான முடிவுக்கு மத்திய அரசே செயலாற்ற முடியும். ஒரு நெருக்கடி காலத்தில் மத்திய அரசுக்கு அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்பட்டதற்கான நியாயம் இதில்தான் இருக்கிறது. இந்த நெருக்கடி கால அதிகாரங்களினால் உறுப்பு மாநிலங்களுக்கு எத்தகைய கடமைகள் சுமத்தப்பட்டுள்ளன? இதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. ஒரு நெருக்கடி நிலையின்போது, தங்களுடைய பிராந்திய நலன்களுடன் மொத்தமாக தேசத்தின் நலன்களையும் கருத்துகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாதவர்கள் மட்டுமே அதை எதிர்த்துக் குறைகூற முடியும்.

 நன்றி : தலித்முரசு (பிப்பிரவரி 2007)

Feb
26

”எவன் ஒருவன் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றானோ; எவன் ஒருவன் சூழ்நிலைக் கைதியாய் இ­ல்லாமல் பொறுப்புணர்ந்து கடமை ஆற்றுகின்றானோ; எவன் ஒருவன் கிளர்ந்து எழுகின்ற மனத்தின்மையைப் பெற்றிருக்கின்றானோ – அவனையே சுதந்திர மனிதன் என்பேன்.

எவன் ஒருவன் முன்னோர்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல், பழம் போதனைகள் என்பதற்காக – அவற்றினை அப்படியே ஏற்காமல் அறிவுப்பூர்வமாக செயல்படுகிறானோ – அவனை நான் சுதந்திர மனிதன் என்பேன்.

எவன் ஒருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல், எதனையும் ஆய்வுக்கு உட்படுத்தி, அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ – அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்.

எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக இ­ருக்கின்றானோ யார் ஒருவன் பொதுவிமர்சனத்துக்கு அச்சப்படாமல் இ­ருக்கின்றானோ அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்றிருக்கின்றானோ – அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்.

எவன் ஒருவன் மற்றவர்களைப் போல வாழ்க்கையை நடத்தாமல் தன் வாழ்வை வரையறை செய்து கொண்டு அதன்படி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று எண்ணி – அதன்படி வாழ்கின்றானோ அவனையே நான் சுதந்திரம் பெற்ற மனிதன் என்பேன்.

இ­துவரை கூறப்பட்ட கருத்துகளின்படிப் பார்த்தால் நீங்கள் சுதந்திர மனிதர்களா? உங்கள் ‘லட்சியங்களை வடித்துக் கொள்ள, உங்களுக்கு சுதந்திரம் ­இருக்கின்றதா? உங்களுக்குச் சுதந்திரம் இ­ல்லாதது மட்டுமல்ல; நீங்கள் அடிமையிலும் கேவலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அடிமைத்தனத்திற்கு ஈடு இ­ணையே ­இல்லை என்பேன்.”

­இவ்வாறு சுதந்திரமனிதன் பற்றிய சிந்தனையை வெளிப்படுத்தியவர் அம்பேத்கர். ­இதுவரை ­இந்தியாவில் உருவான அரசியல் தலைவர்களுள் ­இவர் தனித்துவமானவர். விடுதலை அரசியல் பற்றிய தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தனை செய்த புலமையாளர். சமூகநீதி ­இழைக்கப்படுவதற்கும் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதற்கும் மூலகாரணம் சாதியமைப்பும் தீண்டாமைக் கொடுமையும்தான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.

ஒரு மனிதனுக்கு என்னென்ன கொடுமைகள் நடக்கக் கூடாதோ, அவை அனைத்தும் இ­ந்த நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களாகப் பிறந்தவர்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. உலக மனித உரிமைப் பிரகடனத்தின் உரிமைகள்கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றது.

சாதீய ஒழிப்பு சமூகநீதி ஆகியவற்றை முன்வைத்து போராடுவதற்கு விழிப்புணர்வு பெறுவதற்கு அம்பேத்கர் தனது சொல்லாலும் செயலாலும் ஓர் வழிமுறையை பாதையை வகுத்துக் காட்டியுள்ளார்.

”சுதந்திர ­இந்தியாவில் நம்முடைய நிலை என்ன? நான் இ­ந்தக் கேள்வியை காந்தியிடமும் காங்கிரஸ தலைவர்களிடமும் எழுப்பினேன். சுதந்திர இ­ந்தியாவில் எங்கள் பிள்ளைகள் கல்வி பெறும் வாய்ப்பைப் பெறுவார்களா? எங்கள் மக்கள் சுதந்திர குடிமக்களாக ­இந்தியாவில் வாழமுடியுமா? காந்தியோ பிற தலைவர்களோ ‍ ­இக்கேள்விகளுக்கு நேரடியாகவோ, நிறைவான பதிலையோ அளிக்கவில்லை” என்பதை அம்பேத்கர் 1952ல் நடைபெற்ற முதல் தேர்தலையொட்டி 27.10.51 அன்று ஜலந்தரில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

ஆனால் ­இன்று எத்தனையோ தேர்தல்களை கண்டுவிட்டோம். எத்தனையோ ஆட்சிகள் வந்து போய்விட்டன. ஆயினும் அம்பேத்கர் அன்று காந்தியிடம் காங்கிரஸகாரர்களிடம் எழுப்பிய கேள்வியைத் தான் ­இன்றுகூட கேட்க வேண்டியுள்ளது. பதில் மட்டும் ­இல்லை. அத்தகைய பதில் சொல்ல வேண்டிய பொறுப்புக்கூட எவருக்கும் இ­ல்லை.

ஆட்சி அதிகாரம் முதல் அரசு நிர்வாகம் ஈறாக ஆதிக்க கருத்தியல்நிலை ­இறுக்கமடைந்துதான் உள்ளது. சாதியக் கண்ணோட்டம் எங்கும் ­இயல்பாகவே படர்ந்துள்ளது. சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்கள் மிக மோசமாக நடத்தப்படும் கொடுமைகள் நாள்தோறும் நடந்தேறிக் கொண்டுதான் உள்ளது.

தாழ்த்தப்பட்டவர்களின் உயிரைக்கூட ஆதிக்க சாதியினர் பறித்துவிட முடியும். அவர்களை சட்டம் ஒன்றும் செய்துவிடாது. ஆதிக்க சாதியினரைப் பாதுகாக்கவே இ­ந்திய அரசியல் சாசனம் வகுக்கப்பட்டது போன்று தான் ­இன்று நிலைமைகள் உள்ளன. ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை ஆதிக்க சாதியினரின் நலன்களைப் பாதுகாப்பதில் தான் தமது தலையாய கடமை உள்ளது என்று நினைத்து செயற்படுகிறார்கள்.

அம்பேத்கர் விதைத்த சீரிய சிந்தனைகளும் செயற்பாடுகளும் சுதந்திரத்துக்கு பின்னர் உருவான சமூக-அரசியல் சக்திகளால் முழுமையாக புரிந்து கொள்ளப்பட்டு உள்வாங்கப்பட்டு வரவில்லை. ­இதனால் அம்பேத்கருக்கு பிந்திய தலித் இ­யக்கங்கள் இ­ந்திய அரசியலில் சமூகமாற்றத்தில் முழுமை தாக்கத்தை செலுத்த முடியாமல் போய்விட்டது. அல்லது ஆதிக்க சாதியினரின் பலம் அதிகாரம் ஆதிக்கம் தலித் இ­யக்கங்களை நசுக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது. ஆனால் தலித் இ­யக்கங்கள் தோன்ற வேண்டிய செயற்பட வேண்டிய தேவையை ஒவ்வொரு கணமும் முன்னகர்த்திக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

அம்பேத்கர் நூற்றாண்டு அம்பேத்கரை மீள்கண்டுபிடிப்பு செய்யவேண்டிய சமூக நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அம்பேத்கரின் சிந்தனையும் செயற்பாடும் விரிவான தாக்கங்களுக்கு உள்ளாகியது. ­இருபதாம் நூற்றாண்டின் ­இறுதிப் பத்தாண்டுகள் தலித் பிரச்சனையை சுற்றிச் சுழன்று வரக்கூடிய நிலைமையை ஏற்படுத்தியது. ­இலக்கியம், கலாசாரம், வரலாறு, அரசியல் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் ‘தலித் சிந்தனை’ ‘தலித் விடுதலை அரசியல்’ பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியது.

அம்பேத்கர் முன் வைத்த சிந்தனைகளும் விவாதங்களும் சமூக மாற்ற சக்திகளுக்கு புதிய பொருள் கோடல் முறைமைக்கு தயார் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆதிக்க சாதியினரின் அனைத்துவிதமான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியத்தை தெளிவை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் களத்தில் இ­யங்கும் தேர்தல் கட்சிகளும் தலித் அரசியலை சந்தர்ப்பவாதமாகக்கூட அங்கீகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அம்பேத்காரை முன்னிறுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. தலித் மக்களுக்கு தமது உரிமைகளுக்கு குரல் கொடுக்க போராட வேண்டிய சுயத்துவத்தை அம்பேத்கர் பலவாறு உணர்த்தியுள்ளார்.

இ­ந்தியப் பின்புலத்தில் உருவான சிந்தனையாளர்களில் புரட்சியாளர்களுள் அம்பேத்கர் முதன்மையானவர் என்றால் மிகையாகாது. சமூகநீதிக்கும் சாதிய ஒழிப்புக்கும் அம்பேத்கர் பெயர் ஓர் ஆயுதமாகவே ­இருக்கும். ­இந்தியா போன்ற சாதியச் சமூக அமைப்பில் அம்பேத்கர் புரட்சிக்கனலாகவே விளங்குகிறார்.

நன்றி திரு.மதுசூதனன்

Jan
31

“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’

1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக 24-9-1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே “புனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். 1951-ம் ஆண்டு “இந்து சட்டத் தொகுப்பு மசோதா’ அறிமுகப்படுத்தப்பட்டபொழுது அதனை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ல் காலமானார்.

காலம் காலமாக சமூக ரீதியாகப் பின் தங்கியுள்ள மக்களைக் கைதூக்கி விடக் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு, அடித்தட்டு மக்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஓரளவுக்கு முன்னேற வாய்ப்பளித்துள்ளது. அதே சமயம் கல்லாமை இருளில் மூழ்கியுள்ள தலித் மக்கள், குறிப்பாக தலித் பெண்கள் இதனால் போதிய பலன் அடையவில்லை. இந்நிலையில் இடஒதுக்கீட்டின் அடிப்படைக்கு வேட்டு வைக்கும் நிலையில் அவ்வப்பொழுது வெளியிடப்பட்டு வரும் நீதிமன்றத் தீர்ப்புகளால் இதன் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. உலகமயமாக்கல் பின்னணியில் இட ஒதுக்கீடு மூலம் வேலை வாய்ப்பளிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருவதால், வேலை வாய்ப்பு பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உலகமயமாக்கல் எதிர்ப்புப் போராட்டத்தில் சமூக நீதிக்காக போராடும் சக்திகளும் ஒருங்கிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.டாக்டர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சாசனம் தலித் மக்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனாலும், சட்ட உரிமைகள் மீறலும், மனித உரிமை மீறலும், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் தொடர் கதைகளாக உள்ளன. இதனை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும்.தலித் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், குடியிருப்புகள் என ஒருங்கிணைந்த வகையில் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை முழுமையாக அமலாக்கப்பட வேண்டும். இப்பகுதி மக்களுக்கென ஒதுக்கப்படும் நிதி முழுமையாக செலவழிக்கப் பட வேண்டும். இவர்களின் நில உரிமை காக்கப்பட வேண்டும். சமூக சமத்துவம் மலர பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுவே டாக்டர் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

 

.

(நன்றி :இரா.சிசுபாலன்)

Tamilnation

<++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மேலும் நண்பர் சேவியர் அவர்களின் பதிப்பில் அண்ணல் அம்பேத்கர்…

http://xavi.wordpress.com/tag/கட்டுரைகள்/அம்பேத்கர்/

Jan
28

“நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால், அது என்னுடைய சமூகத்தை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.”

- டாக்டர் அம்பேத்கர்